பரிகாரம் என்றால் நமக்குள்ள பிரச்னைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகளை அகற்றி நல்வழிகாட்டுமாறு கடவுளிடம் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் இப்படி பல விஷயங்களை வேண்டிக்கொள்வதாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை, பிரச்னைகள் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது. இன்பமும், துன்பமும் இணைந்தே இருப்பதுதான் வாழ்க்கை அமைப்பு. சிலருக்கு துன்பங்கள், துயரங்கள் குறைவாக இருக்கும். பலருக்கு பிரச்னைக்கு மேல் பிரச்னை. அடிமேல் அடி, என்ற நிலை இருக்கும். இவை எல்லாமே நம் பிராரப்த கர்ம வினைதான். நாம் பல்வேறு ஜென்மங்களில் வாங்கி வந்த வரம். இந்த நல்வினை, தீவினைகளை நம் ஜாதக அமைப்பு, கிரக தசா புக்திகள், கோச்சார அமைப்புக்கள் மூலம் கிரகங்கள் நமக்கு உரிய கால நேரத்தில் ஏற்படுத்தித் தருகின்றது.
குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள், தீராத நோய்கள், வியாபாரம், தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னைகள், வழக்குகள், சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள், அடிக்கடி விபத்துக்கள், கடன் பிரச்னைகள், தற்கொலை எண்ணங்கள், புத்திர தோஷம், குழந்தைகளால் பிரச்னை, திருமணத்தடைகள், விவாகரத்து வழக்குகள், அடிக்கடி இடமாற்றம், ஊர் மாற்றம், வருமானத்தடைகள், இன்னும் பல குடும்ப சூழ்நிலை காரணமான சங்கடங்கள் போன்றவைகள் நீங்க வேண்டும் என்பதற்காக பல வகைகளில் வழிபாடுகள், விரதங்கள், நேர்த்திக்கடன்கள் என இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குறிப்பிட்ட பூஜைகள், வழிபாடுகள், விரத நோன்புகள் காலம் காலமாக செய்யப்பட்டு பலன்கள் தந்துகொண்டிருக்கின்றன. அதற்கென்றே பரிகார ஸ்தலங்கள், கோயில்கள் உள்ளன. அவரவர் கர்ம வினைக்கேற்ப, பிராரப்தப்படி பரிகாரங்கள் உடனுக்குடன் பலன் தருகின்றது.
ஒரு சிலருக்கு சற்று காலதாமதமாகிறது. இவற்றையெல்லாம் பக்தியுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் செய்து வரும்போது காலதாமதம் ஆவதால் அவநம்பிக்கை, சலிப்பு ஏற்படுகிறது. சகல பரிகார பூஜைகள், ஹோமங்கள், சித்தர்கள் ரத்தின சாஸ்திர முறைகள், வைதீக தானங்கள் என செய்தும் பலன் கிடைப்பதற்கு தாமதமாவதற்கு காரணம். கிரக தோஷம் தாக்கம் அதிகமாக இருப்பதுதான். அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா என்பது ஒளவையாரின் வாக்காகும். அதாவது நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் முடியும் நாள் என்று ஒன்று உண்டு. அன்றுதான் அது கூடிவரும். ஆனால் பரிகாரங்கள் நிச்சயமாக பலன் தராமல் போகாது. பகவானுக்காக செய்யப்படும் செலவும், நேரமும் ஒரு நாளும் வீண் போகாது.
பல வகையான பழமரங்கள் உள்ளன. இவையெல்லாம் எப்பொழுதும் நமக்கு பழங்களைத் தருவதில்லை. ஒவ்வொரு மரமும் அதற்குண்டான காலம், நேரம், பருவத்திற்கு வரும்போதுதான் பூத்து, காய்த்து, கனி தருகிறது. இதைப்போலத்தான் நமக்கு கால நேரம் எனும் சுபயோக சுப அம்சம் கூடிவரும் பருவத்தில்தான் நடைபெறும் காரியங்கள் நல்ல முறையில் நடக்கின்றன. முயற்சி நம்முடையது முடிவு அவன் செயல். நிகழ்ச்சிகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை அதை இறைவன் கிரகங்களின் மூலம் கால நிர்ணயம் செய்து நமக்கு அளிக்கிறான்.
ஜாதக கட்டத்தில் 1, 5, 9 என்ற ஸ்தானங்கள் உள்ளன. இந்த ஸ்தானங்கள் மிக முக்கியமானவை. லக்னம், பஞ்சமம், பாக்கியம் என்று சொல்வார்கள். இந்த ஸ்தானங்கள்தான் நம் விருப்பங்கள், ஆசைகளை பூர்த்தி செய்பவை. லக்னாதிபதி தசா புக்தி நடக்கும் போது எல்லாம் கூடிவரும். புகழ், பட்டம், பதவி, கௌரவம் எல்லாம் கிடைக்கும். பஞ்சமஸ்தான தசா புக்தி நடக்கும்போது சுபகாரியங்கள் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பரிகாரங்கள் வேலை செய்யும். பாக்கியாதிபதி தசா நடக்கும்போது சொத்து சேரும். நோய் நொடிகள் தீரும். சகல சம்பத்தும் விருத்தியாகும். 6, 8, 12 ஆம் அதிபதிகள் தசா காலம், நீச தசா காலத்தில்தான் நமக்கு கஷ்ட நஷ்டங்கள், காரியத்தடை, நோய் நொடிகள் வருகின்றது. அதே நேரத்தில் சிலருக்கு விபரீத ராஜயோகம், நீச பங்க ராஜ யோகம் என எதிர்பாராத யோகங்களும் அமையும். ஆகையால் ஒருவர் ஒரு வழிபாடு செய்கிறார், ஒரு கோயிலுக்குச் செல்கிறார் என்று அனைவரும் அதையே பின்பற்றாமல் நமக்கு என்ன பலன்கள். நாம் என்ன செய்ய வேண்டும் எந்த ரத்தினம் அணிந்தால் நன்மை, எந்த ஜபம் செய்தால் சித்திக்கும் என்பதை ஜாதக அமைப்பு மூலம் தெரிந்து செய்வதால் நிச்சயமாக வழி பிறக்கும்
ConversionConversion EmoticonEmoticon