முகப்புத்தகத்தில் திரு.சங்கர் நாராயணன் என்ற அன்பர் எழுதியதை கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறௌம்.திரு.சங்கர் நாராயணன் அவர்களுக்கு நன்றி.
ஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட பரமாச்சாரிய சுவாமிகள்!
“பரமாச்சாரியார் எளிமையான வாழ்க்கையை விரும்பியவர். கைராட்டையால் வீட்டில் நூற்ற கதர் நூலால் புனைந்த ஆடையையே அணிவார். ஒரு சிறிய அறையைத் தனது இருப்பிடமாக ஏற்றுக்கொண்டு எளிமையாக அதில் வாழ்ந்தவர்.
அவர் உப்பு சாப்பிடுவதில்லை. அதனால் அவருக்கு வியர்வையின் அவஸ்தை கிடையாது. குக்குடாசன நிலையில் ஒரே காலில் நின்று கொண்டு ஒரு மணி நேரத்திற்கு உரைநிகழ்த்தக்கூடிய அபூர்வ சக்தி படைத்தவர் அவர்.
யோகாசனங்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்.
மகா சுவாமிகளின் உணவு மிக எளிமையானது. பீடத்தில் அமர்ந்தl நாளிலிருந்து உணவில் புளி,உப்பு,காரம் சேர்த்துக் கொண்டதே இல்லை.
நெற்பொறியும் சில பழங்களும் [கிடைத்தால் மட்டுமே] பாலும்தான் அவருடைய ஆகாரம். குணத்தாலும் செயலாலும் தவறு செய்தவர்களைப் பார்க்க நேர்ந்து விட்டால் அன்று முழுவதும் உபவாசம் இருந்து விடுவார். கல்கத்தாவில் ஒருமாதம் வில்வப் பழம் மட்டுமே சாப்பிட்டு அவர் இருந்திருக்கிறார்
எப்போதும் கமண்டலம்,தண்டம் ,காஷாயவஸ்திரம் இல்லாமல் இருக்கமாட்டார்.
பெண்கள் யாரும் அவரைத் தனிமையாகத் தரிசிக்கமுடியாது. குளிக்கப்போகும் நேரம் தவிர மற்றவேளைகளில் தண்டம் அவருடன் இருக்கும். தூங்கும் போதும்கூட அதைப் பிடித்துக் கொள்வார். எவ்வளவு நேரம் கழித்துத் தூங்கப் போனாலும் விடியற்காலை நான்குமணிக்கே எழுந்து விடுவார்.
முழுமையாக ஜபத்தில் ஈடுபட்டுவிடுவார். வேதம், தர்ம சாஸ்திரம்,புராணம்,இதிகாசம் ஆகியவற்றை முழுமையாகக் கற்றறிந்தவர். ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம்,லத்தீன் மொழிகளை நன்கு அறிந்தவர்.
தமிழ்மொழியில் தனிப்புலமை பெற்றவர். திருப்பாவை திருவெம்பாவை பாடல்களும், கோளறுபதிகத்தையும் தமிழ் மக்களிடையே பக்தியுடன் பரவச் செய்வதற்கு முயற்சி செய்தவர்.
நோயாளிகளுக்கு மருத்துவமனையில் விபூதிப் பிரசாதம் வழங்கவும்,சாகும் தருவாயில் உள்ளவர்களுக்கு உதவி, இறுதிகடன்களைச் செய்யவும் உதவியவர்.
ஒரு தடவை அவர் மடத்தில் உள்ள காரியஸ்தரிடம் கல்கத்தாவில் உள்ள ஒருவருக்கு உடனே ஐந்நூறு ரூபாய் அனுப்பி வைக்கும் படி கூறினார். பலருக்கும் அதன் காரணம் புரியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு அவரைத் தரிசிக்க வந்த எளியவர் ஒருவர் “சுவாமி! அன்று தாங்கள் அனுப்பி வைத்த ஐந்நூறு ரூபாய்தான், தந்தை இறந்ததும் இறுதிக்கடன்களைச் செய்ய உதவிற்று! என்று கூறினார்.
மகா சுவாமிகளின் கண்ணோட்டமும், எளிமையும், இரக்கசுபாவமும் இணையே இல்லாதவை
ஆன்மீகம் என்றால் என்ன, உண்மையான ஆன்மீக ஞானிகள் எப்படி இருப்பார் என்று நம் குழந்தைகள் கேட்டார்களேயானால் அதை விளக்கவோ, உண்மையான ஒரு ஆன்மீக ஞானியை அடையாளம் காட்டவோ சிரம்பப்படும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பகட்டு, படாடோபம், நடிப்பு, விளம்பரம், தந்திரம் என்று பல வடிவங்களை எடுத்துக் கொண்டு இன்றைய ஆன்மீகம் நம்மை படாத பாடு படுத்துகிறது. எது ஆன்மீகம் என்று கிட்டத்தட்ட மறந்தே போய் விட்ட நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.
ஆனால் ஆன்மீகத்திற்கும், ஒரு சிறந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு நல்ல அடையாளமாய் 1994 வரை இந்த உலகில் ஒரு மாமனிதர் நம்மிடையே நிறைவான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்.
சுமார் நூறாண்டுகள் வாழ்ந்த அவரது வாழ்க்கையில் சின்னக் களங்கம் கூட இல்லை. ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரசர்கள், மந்திரிகள், வெளிநாட்டு உள்நாட்டு மேதைகள் எல்லாம் அவர் இருக்கும் இடம் தேடி வந்து வணங்குவதைத் தங்கள் பாக்கியமாகக் கருதியிருக்கிறார்கள். ஆனால் அந்த மனிதர் அது போன்ற பக்தர்கள் தனக்கிருப்பதில் எள்ளளவும் பெருமிதம் கொண்டதோ, அகங்காரம் அடைந்ததோ
இல்லை. அவர் தான் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்ட மகான்.
மகாசுவாமிகள் எளிமையே உருவானவர்.
காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பட்டத்திற்குரிய எல்லா வசதிகளும் அவருக்கு இருந்தன. தரிக்க கிரீடம், அமர சிம்மாசனம், அமர்ந்து செல்ல சிவிகை, புடைசூழ்ந்து வர யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. ஆனால் அவருக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் இருக்கவில்லை. தன் யாத்திரைகளை கால்நடையாகவே அவர் நடந்து செல்வார். தயிரிலோ, பாலிலோ ஊற வைக்கப்பட்ட நெற்பொறியை ஓரிரு கவளம் சாப்பிடுவது தான் அவரது பகல் உணவு. இரவில் சிறிது பால் மட்டுமே சாப்பிடுவார். பொதுமக்களுக்கு தரிசனம் தரும் வேளைகளில் தான் அவர் நாற்காலி அல்லது மனையில் அமர்வார். மற்ற வேளைகளில் சாதாரண கோணிச் சாக்கு மட்டுமே அவருக்குப் போதும்.
பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பல துறைகளில் நல்ல ஞானமும், ஆர்வமும் இருந்தது. பல நூல்களைப் படித்த அவர் சம்பந்தப்பட்ட துறையாளர்களிடமும் எதையும் நுட்பமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். விஞ்ஞானம், கணிதம், வானவியல், வரலாறு, பூகோளம், சமூக இயல் போன்ற துறைகளில் அவருக்கு இருந்த அறிவு அபாரமானது.
புகைப்படக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றிலும் எதையும் நுட்பமாக ஆராய்ந்து விளக்குவார். பல மொழிகளை அறிந்திருந்தார். இந்த அபார அறிவும் அவருக்கு துளியும் கர்வத்தை ஏற்படுத்தியதில்லை.
தமிழகத்தின் முன்னால் கவர்னராக இருந்த டாக்டர் பி.சி.அலெக்சாண்டர் ஒரு முறை பரமாச்சாரிய சுவாமிகளை தரிசிக்கச் சென்றார்.
ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அரசர்களும் தொழும் மகா சுவாமிகள் அவரது குடிலில் கோணிச் சாக்கை விரித்து அமர்ந்திருந்ததைக் கண்ட அலெக்சாண்டருக்கு வியப்பு தாளவில்லை. இப்படி ஒரு எளிமையையும், பணிவையும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அலெக்சாண்டரும் அவர் எதிரே பாயில் காளை மடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
பேசும் போது அலெக்சாண்டர் எதில் டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை மகா சுவாமிகள் கேட்டார். அலெக்சாண்டர் தான் ஒரு சிரியன் கிறிஸ்துவர் என்றும் சிரியன் கிறிஸ்துவர்கள் பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கியதாகவும் சொன்னார். உடனே பேச்சு சிரியன் கிறிஸ்துவர்களைப் பற்றி எழுந்தது.
அலெக்சாண்டர் ஆராய்ச்சி செய்து அறிந்ததைக் காட்டிலும் அதிகமாக மகா சுவாமிகள் சிரியன் கிறிஸ்துவர்களுடைய சமூகப் பின்னணி, பழக்க வழக்கங்கள், சமூகத் தொண்டுகள், கேரளத்தில் அவர்கள் வேரூன்றிய சரித்திரம் பற்றியெல்லாம் அறிந்திருந்தார். கவர்னர் அலெக்சாண்டர் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை. வேறொரு மதத்தின் ஒரு சிறு பிரிவைப் பற்றி இவ்வளவு விரிவாக அவர் அறிந்து வைத்திருந்தது அவருக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.
அவருடைய அறிவு ஞானம் இப்படி பல மதங்கள், பல நாடுகள் என்று விரிந்து இருந்தது. ஆன்மீகத்தில் அவர் அடைந்திருந்த ஞானம் அளப்பரியது. இதையெல்லாம் அவருடைய சொற்பொழிவுகளின் தொகுப்பான “தெய்வத்தின் குரல்” படித்தவர்கள் நன்றாக உணரலாம். அவர் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி அதிகம் விவரிக்காமல் மனித தர்மத்தைப் பற்றியும், ஞான மேன்மைக்கான வழிகளைப் பற்றியும் பேசியது அதிகம். பாமரனுக்கும் புரியும் படியாக பெரிய பெரிய விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.
பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவஞானி யோகிகளைத் தேடி இந்தியா வந்த போது பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்ததை விளக்கமாக எழுதியுள்ளார்.
பரமாச்சாரிய சுவாமிகளின் ஞானத்தால் அவர் வெகுவாகவே கவரப்பட்டார். தான் இந்தியா வந்த காரணத்தை அவர் சொன்ன போது பரமாச்சாரிய சுவாமிகள் நீ தேடி வந்த யோகி நான் தான் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லிக் கொள்ளவில்லை.’நீங்கள் காண வந்த யோகியை நிச்சயம் காண்பீர்கள். மேலும் பயணியுங்கள்” என்றே சொன்னார். அது போலவே பின்னர் பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் தன் தேடலை முடித்தார்.
உபதேசங்கள் செய்வது சுலபம். அந்த உபதேசங்கள் படி வாழ்ந்து ஒரு உதாரணமாய் திகழ்வது கஷ்டம். பரமாச்சாரியார் அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அவருடைய கனகாபிஷேக நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. நேபாள மன்னர், இந்திய ஜனாதிபதி முதற்கொண்டு பல பெரிய மனிதர்கள் கைகூப்பி நிற்க பரமாச்சாரியருக்கு பொற்காசுகளால் அபிஷேகம் செய்தார்கள்.
மற்றவர்களின் கட்டாயத்திற்கு அமர்ந்திருந்த அவர் சிறு சலனம் கூட இல்லாமல், எதிலும் பாதிக்கப்படாமல், பற்றற்ற நிலையில் கடவுளை தியானித்தவராய் கரம் குவித்து அமர்ந்திருந்தார். ”ஏதோ சிறியவர்கள் ஆசைப்படுகிறார்கள், செய்கிறார்கள், செய்து விட்டுப் போகட்டும்” என்பது போல் பொறுமையாக சகித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு புண்ணியாத்மாவை அன்று என்னால் பார்க்க முடிந்தது.
வாழ்ந்த நாட்களில் அவர் விளம்பரம் தேடியதில்லை. அனாவசிய சர்ச்சைகளில் ஈடுபட்டதில்லை. நடித்ததில்லை. நல்ல அறிவைப் பெறுவதும், ஞான வழிகளில் ஆழமான நாட்டமும், அறிந்ததையும்,
உணர்ந்ததையும் போதிப்பதுவுமே அவர் வாழ்க்கையாக இருந்தது.
அவர் 1994 ஜனவரி எட்டாம் நாள் மறைந்த போது அவருடைய பக்தர்கள் மட்டுமல்ல மற்ற மதத்தலைவர்களும், நாத்திகர்களும் கூட அவரை மனதாரப் பாராட்டியது அவர் வாழ்ந்த களங்கமில்லாத வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம் என்றே சொல்ல வேண்டும். உண்மையான ஞானி, ஆன்மீகத் தலைவர் என்ற சொற்களுக்கெல்லாம் இனி வரும் சந்ததியருக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் தயக்கம் சிறிதும் இல்லாமல் பரமாச்சாரிய சுவாமிகளை நாம் காட்டலாம்.
இது நாம் எழுதிய பின்குறிப்பு:ஸ்ரீமகாபெரியவரைப் புரிந்து கொள்ள அவரது எளிமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.எங்கே எளிமை இருக்கிறதோ அங்கே துரய்மை இருக்கும்.அங்கே தேவையற்றவை இருக்காது.தெய்வத்தன்மையூம் அருளும் நிறைந்திருக்கும்.அந்த சூழலில் எல்லாமே வெற்றியடையூம்.
ஷேர் டிரேடிங் என்பதும் அப்படித்தான்.
இதை வாங்கலாமா.அதை வாங்கலாமா.சந்தை துவங்கியதும் உடனே ஆர்டர் போடலாமா.விலை ஏறிக் கொண்டிருக்கிறதே..துரத்திச் சென்று அந்த பங்கை வாங்கலாமா.இந்த ஸ்;ட்ராட்டஜியைப் போடலாமா.அந்த ஸ்ட்ராட்டஜியைப் போடலாமா என்றெல்லாம் பலவிமான எண்ணங்களுடன் ஷேர் டிரேடிங் செய்தால் அது நிச்சயம் நஷ்டத்தில்தான் கொண்டு போய் விடும்.
எளிமையான அணுகுமுறை.சின்னதாய் ஒரே ஒரு ஸ்ட்ராட்டஜி.நன்கு பழகிய தோழன் போல தினமும் பலமாதங்களாக கவனித்து வந்த ஒரே ஒரு பங்கில் மட்டும் பரபரப்பின்றி அமைதியாக நிதானமாக டிரேடிங் செய்வது என்று வழக்கப்படுத்திக் கொண்டு விட்டால் அது எந்த நாளும் வெற்றியை மட்டுமே தரும்.
அதனால் தேவை எளிமை.அமைதி.துரய்மை.அத்துடன் நீங்கள் செய்யூம் டிரேடிங்கில் உள்ள பங்கின் மீது அளவற்ற அன்பு.
ConversionConversion EmoticonEmoticon