சில ஆண்டுகள் முன்பாக விகடன் பிரசுரத்தில் எனது 'ஜெயிக்கத் தெரிந்த மனமே' என்ற சுயமுன்னேற்ற புத்தகத்தை வெளியிட்டார்கள்.அது விற்பனையில் சக்கை போடு போட்ட புத்தகம்.இன்று கூட யாராவது அந்த புத்தகத்தை வாங்கியிருந்தேன்.அந்த புத்தகம் எனக்காகவே எழுதியதைப் போன்று இருந்தது என்று தொடர்பு கொண்டு பாராட்டுவார்கள்.மிகக் குறுகிய காலத்தில் எழுதப் பட்ட சிறிய புத்தகம் அது.அந்த புத்தகத்தை வெளியிடும் காலங்களில் ஆலோசனைகள் சொல்லிய அப்போது விகடன் பிரசுரத்திலிருந்த திரு.செங்கோட்டைஸ்ரீராம் அவர்களுக்கு(இப்போது தினமணியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்) என் மானசீகமான நன்றி.இப்போது புதிய தொடருக்குள் செல்வோம்.வாருங்கள்.
எங்காவது வெளியில் சென்று வருவோம் என்றால் எனக்கு மிகவூம் விருப்பமான இடங்கள் இரண்டுதான்.ஒன்று கோவில்கள்.இன்னொன்று வங்கிகள்.காரணம் வங்கிகள் என்பது கரன்சிகள் அதிக அளவில் புழங்கக்கூடிய இடம்.அதாவது பணம் என்ற சக்தி ஓரிடத்தில் அதிக அளவில் குவிந்திருக்கக் கூடிய இடம் என்று நினைப்பேன்.நான் மிகவூம் சிறுவயதிலேயே அதாவது பள்ளிக் கூட காலத்திலேயே பிடிவாதமான அடம் பிடித்து வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கினேன்.அப்போதெல்லாம் சிறுவர் சிறுமியர்களுக்கு குறைந்தபட்ச பேலன்ஸாக ஐம்பது பைசா வைத்திருந்தால் போதும்.பெரியவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஐந்து ரூபாய் வைத்திருந்தால் போதும்.நம்ப முடிகிறதா? அப்படி சிறுகச் சிறுக வங்கியில் பணம் சேர்த்து வந்திருக்கிறேன்.அதற்கு முன்பாக பெட்டிக்கடைகளில் ஒரு ரோஜா வண்ண அட்டையைக் கொடுப்பார்கள்.பார்ப்பதற்கு அந்தக் கால பால்கார்டு போல இருக்கும்.அதில் 100 கட்டங்கள் இருக்கும்.ஒரு ஐந்து பைசாவை பெட்டிக்கடைக்காரருக்குக் கொடுத்தால் அதில் ஒரு குறுக்குக் கோடு போட்டு அந்த அட்டையைத் தருவார்.அந்த அட்டைதான் அப்போது பாஸ்புக் போன்றது.மற்ற பசங்க எல்லாம் குச்சி ஐஸூம் சீவல் ஐஸூம் (ஐ பட பாடலில் பார்த்திருப்பீர்களே அது போன்ற கலர் கலர் குச்சி ஐஸ்) இலந்தைப் பழமும் வாங்கித் தின்னும்போது நான் சின்னச் சின்ன காசுகளை சேர்த்துக் கொண்டே வருவேன்.100 கட்டங்கள் முடிந்ததும் ஐந்து ரூபாய் சேர்ந்திருக்கும்.ஆனால் அந்த பெட்டிக்கடைக்கார பாய் அவர் பங்காக ஐம்பது காசை எடுத்துக் கொண்டு விட்டு மீதமுள்ள ரூ 4.50ஐ தருவார்.அதைக் கொ;ணடு வந்ததுமே வீட்டில் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள் என்பது வேறொரு சோகக்கதை.
அந்த காசுகளை வாங்கிக் கொண்டு (ஆம்.பணமாக தரமாட்டார்கள்.ஐந்து ரூபாய் நோட்டு என்பது அப்போது மதிப்பானது.பச்சை நோட்டு என்று மதிப்பாகக் குறிப்பிடுவார்கள்.ஒரு காசு இரண்டு காசுகள் எல்லாம் புழக்கத்தில் இருந்த சந்தோஷமான காலம் அது) பள்ளிக்குச் சென்று வகுப்பில் யோசனையூம் கவலையூமாக அமர்ந்திருப்பேன்.அப்போது தமிழ் வகுப்புகள்தான் ஒரு வித ஜனரஞ்சகத்துடன் இருக்கும்.கமர்ஷியலாக எழுதவூம் யோசிக்கவூம் கற்றுக்கொடுத்தவர்கள் அப்போதிருந்த தமிழய்யாக்கள்தான்.அதில் ஒரு தமிழாசிரியரிடம் போய் கேட்டேன்.
அது என் காசு.
நான் சிறுகச்சிறுக சேர்த்த சேமித்த காசு.
முதலிலேயே ஐந்து ஐந்து பைசாவாக பெட்டிக்கடைக்காரரிடம் கொடுத்து விட்டேன்.
அவர் ஐந்து ஐந்து காசுகளாக என்னிடம் வாங்கிக் கொள்கிறார்.
ஆனால் 100 கட்டம் முடித்ததும் அவர்தானே எனக்கு கூடுதலாக ஏதாவது தர வேண்டுமஅப்போது வட்டி என்றால் என்ன என்றும் வட்டி என்ற சொல்லே எனக்குத் தெரியாது.
எனது காசை பத்திரமாக வைத்துக் கொள்வதற்கு நான் எதற்காக அவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு தமிழய்யா இரண்டு விஷயங்கள் சொன்னார்.
இதுதான்டா சுவிஸ்பாங்க்னு சொல்றாங்க பார்த்தியா அந்த டெக்னிக்.ரகசியமா நம்ம பணத்தை வைச்சிக்க நம்மகிட்டயே வட்டி வாங்குவான் சுவிஸ்பாங்க்காரன்.நம்மாளும் பணம் பத்திரமா இருக்குதேன்னு வட்டி கொடுத்துர்வான்.
இன்னொன்று:இதுதான்டா ஷேரு ஷேருன்னு சொல்றாங்கள்ல அந்த மார்க்கெட்டுடா பயலே என்றார்.
அது என்ன மார்க்கெட்.காய் கறி விக்கறாப்லயா என்பேன் அறியாமையால்.
ஆமடா.பங்குப்பத்திரத்தை கூவிக்கூவி விப்பாங்க.கம்பெனி ஆரம்பிச்சி பிசினஸ் பண்றதுக்கு பணம் வேணும்ல.அதுக்கு நீ அஞ்சு அஞ்சு பைசாவா கொடுத்த மாதிரி பத்து பத்து ரூபாங்கற கணக்குல ஈக்விட்டி ஷேரா சனங்ககிட்ட இருந்து கம்பெனிக்காரன் பணம் வாங்கிக்குவான்.நீ கொடுத்த பணத்துக்கு வட்டியா ஒரு தொகை வரும்ல.அதையூம் அவனே எடுத்துக்குவான்.ஆனா சிலபேரு போனாப்போவூதுன்னு லாபத்துல ஒரு தொகை தருவான்..சரி படிக்கற வயசுல இதெல்லாம் எதுக்கு உனக்கு என்று விபரம் சொல்லி விரட்டி விடுவார்.
ஆனால் அடுத்தடுத்த வகுப்புகளிலும் அவர் சொன்னது என் மனதில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.குட்டி குட்டியா இருக்கற காசு மெல்லமெல்ல வளருமாம்.குட்டி குட்டியா போடுவாம்.அதுதான் வட்டியாம்.பணம் வளருதாம்.அதன்பின் யாரையாவது பெரியவர்களை சந்தித்தால் இது பற்றி கேட்டால் உடனே விரட்டுவார்கள்.படிக்கற வயசுல பணம் வளருதாம்.குட்டி போடுதாம்.பய வளர்ப்பு சரியில்லை என்று விரட்டுவார்கள்.உட்கார வைத்து அறிவூரை சொல்வார்கள்.
என்ன அறிவூரை என்று நினைக்கிறீர்கள்.
ஒழுங்கா படிக்கனும்.நல்லா மார்க் வாங்கனும்.எக்ஸாம் எழுதி கவர்மன்ட் வேலைல சேரனும்.கால் காசா இருந்தாலும் அது கெவர்மன்ட் காசுல்ல! என்பார்கள்.
எதுக்கு கால்காசு.கால் படற இடமெல்லாம் காசா இருக்கனும்.வீடு முழக்க காசா இருக்கனும்.பெட்டி திறந்தா காசு சிரிக்கனும்.இதெல்லாம் அந்த கெவர்மன்ட் வேலைல கிடைக்குமா என்பேன் மெதுவாக.கிடைக்காது என்றும் சொல்லிக்கொள்வேன் மெதுவாக.
பணத்தோடு சின்ன வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்களை நினைத்துப் பாருங்கள்.ப்ளாக்அன்ட் ஒயிட்டில் ரீவன்ட் செய்து ஓட்டிப் பார்க்காமல் நல்ல கலர்ஃபுல்லாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட சினிமாப் படம் போல ஓட்டிப் பாருங்கள்.பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.அடுத்த அத்தியாத்திலிருந்து பணத்தை நமக்கு அருகில் கொண்டு வருவதைப் பற்றிப் பார்ப்போம்.
ConversionConversion EmoticonEmoticon