"வண்ணத்துப் பூச்சிகளை அடைத்து வைக்காதீர்கள்"
சின்ன வயதில் நாங்கள் குடியிருந்த பகுதியில் திறந்த வெளிகள் நிறைய இருக்கும்.சற்று தொலைவில் சென்றால் மாந்தோப்புகள் தென்னந்தோப்புகள் எல்லாம் கூட இருக்கும்.மாங்காய் நாவற்பழம் இலந்தைப் பழம் நுங்கு போன்றவற்றை காசு கொடுத்து வாங்காமல் மரத்திலிருந்து நேரடியாக ஏறிப்பறித்து உண்டு மகிழ்ந்த ஒரு அற்புதமான தருணம் அது.அப்போது கோடை விடுமுறையில் வெய்யிலிலேயே அலைந்து திரிந்து கறுத்துக் கிடப்போம்.சில நாட்களில் வண்ணத்துப்பூச்சிகளை துரத்திப் பிடிப்பதுண்டு.அதற்காக கால்களில் குத்தும் நெருஞ்சிமுள்ளுகளைப் பொருட்படுத்தாமல் ஓடி ஓடிப்போய் பிடிப்போம்.அப்படி கஷ்டப்பட்டு பிடித்து வருகிற வண்ணத்துப் பூச்சிகள் பலவித நிறங்களில் படபடப்பாக கைகளில் இருக்கும்.சிறிது நேரம் அதை கைகளில் வைத்து வேடிக்கைப் பார்த்து விட்டு அதனை கையோடு கொண்டு சென்றிருக்கிற காலியான பான்ட்ஸ் பவூடர் டப்பாவில் போட்டு மூடி விட்டு அடுத்தடுத்த வண்ணத்துப் பூச்சிகளை வேட்டையாடுவோம்.அத்தனை வண்ணத்துப் பூச்சிகளையூம் பிடித்து டப்பாவில் போட்டு மூடி விடுவோம்.அன்றைய தினம் மிகவூம் பெருமையாக இருக்கும்.யார் அதிகம் வண்ணத்துப்பூச்சியைப் பிடித்தானோ அவன்தான் அன்றைய அறிவிக்கப்படாத 'மேன் ஆஃப் த மேட்ச்' எங்களது செட்டில்.மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால்தான் அதிர்ச்சியாக இருக்கும்.பவூடர் டப்பால் போட்டு வைத்திருக்கிற அத்தனை வண்ணத்துப் பூச்சிகளும் செத்துப் போய் கிடக்கும்.மனசு வலிக்கும்.ஏமாற்றமாக இருக்கும்.எங்களது செட்டில் விளையாட வரும் அத்தனைப் பசங்களும் அதே போன்ற ஏமாற்றத்துடன் செத்துருச்சிங்கடா என்று முகத்தை தொங்கப் போட்டு விட்டு வருவார்கள்.அதன்பின் சிறிது நேர மௌன அஞ்சலிக்குப் பிறகு வாங்கடா போலாம் என்று பொன்வண்டு பிடிக்கப் போய் விடுவோம்.பொன்வண்டு ஒரு நாளில் எல்லாம் செத்துப் போகாது.ஆனால் டப்பாவில் அடைத்தவூடன் ஏழு நாட்களில் செத்துப் போய் விடும்.
இப்போது பணம் பற்றிய நமது மேட்டருக்கு வருவோம்.
பணம் என்பதும் வண்ணத்துப்பூச்சிகள் போலத்தான்.எப்படி வண்ணத்துப்பூச்சிகள் அழகாக பல வண்ணத்துடன் சுறுசுறுவென்று அங்கும் இங்கும் அலைகிறதோ அதைப் போல பணமும் ஒரே இடத்தில் இருக்காமல் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும்.அப்போதுதான் வளரும்.ஆட்டைத் துரக்கி மாட்டைப் போட்டு மாட்டைத் துரக்கி ஆட்டில் போட்டு என்பார்கள்.அது போல என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.ஆனால் பணம் என்பது ஒரே இடத்தில் தேங்கக் கூடாது.நீங்கள் இப்போதெல்லாம் டயபடிஸ் வருமோ இரத்தக் கொதிப்பு வருமோ வெயிட் கூடி விடுமோ என்ற பயத்தில் நீங்கள் ஒருவேளை டயட்டில் இருக்க ஆரம்பித்திருக்கலாம்.அப்படி டயட்டில் இருப்பதற்கு முன்னர் என்ன செலவாகியது.டயட்டில் இருக்க ஆரம்பித்தபின் என்ன செலவாகியது என்று கணக்குப் பார்த்தால் அதில் கூட சிறிது பணம் மிச்சமாகியிருந்திருக்கும்.ஆனால் சரியாகக் கவனித்துப் பார்த்தீர்களானால் அந்த பணம் வேறெங்கே அனாமத்தாக தேவையில்லாமல் செலவாகியிருக்கும்.அந்த பணம்தான் வண்ணத்துப் பூச்சிகள் போன்று இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த பணத்தைப் பிடித்துப் போடுங்கள்.ஒரு டப்பாவில் போட்டுக் கொண்டே வாருங்கள்.ஒவ்வொரு மாதமும் இப்படி போட்டுக் கொண்டே வரும் பணம் சில வருடங்களில் செத்துப் போயிருக்கும்.அதாவது விலைவாசி காரணமாக அந்த பணத்தின் மதிப்பு பாதியாகவோ அதற்கும் கீழாகவோ குறைந்து போய் கிடக்கும்.அதனால் அந்தப் பணத்தை டப்பாவிலோ வங்கி சேமிப்புக் கணக்கிலோ சும்மா போட்டு வைக்காமல் எதிலாவது முதலீடு செய்ய முடியூமா என்று பாருங்கள்.
எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யூங்கள்.
எதில் அதிக லாபம் வருகிறது என்பதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.இப்போதைக்கு எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் டார்கெட்.
அப்படி முதலீடு செய்வதை எடுத்து வேறு எதிலாவது மறுமுதலீடு என்று அந்த பணத்தை சுற்ற வைத்துக் கொண்டே வாருங்கள்.சுற்றிக் கொண்டே இருக்கும் பணம் சுறுசுறுப்பாக இருப்பதோடு மெல்ல வளரவூம் ஆரம்பிக்கும்.
கையில் எத்தனை சிறிய தொகையாக இருந்தாலும் ஏன் ஒரே ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட அதனை பெட்டியிலோ சட்டைப்பையிலோ போட்டு சமாதி கட்டாதீர்கள்.அதனை சுற்ற விடுங்கள்.அதவது வளர விடுங்கள்.பதிலுக்கு அது உங்களை பெரிதாக வளர வைத்து விடும்.செய்து பாருங்கள்.புரியூம்.
ConversionConversion EmoticonEmoticon