"குத்துங்க எசமான் குத்துங்க..."
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் இந்த வசனம் இன்றைக்கும் பொருத்தமானதாகத்தான் இருக்கிறது.இது முன்னர் நடந்த கதை.அப்போதெல்லாம் டிமேட் கணக்கு துவங்குவது என்கிற வழக்கம் கிடையாது.எல்லாமே ஷேர் சர்ட்டிபிகேட்கள்தான்.100 என்ற எண்ணிக்கையில் பொதுவாக சர்ட்டிபிகேட்களை அடித்திருப்பார்கள்.அந்த பிசிக்கல் சர்ட்டிபிகேட்களை சென்னை பங்குச்சந்தையில் கூவி கூவி டிரேடிங் ஹாலில் விற்பார்கள்.பார்க்க செம காமடியாக இருக்கும்.
இப்போதைய முதலீட்டாளர்கள் அது போன்ற அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள்.அப்போது 1990களின் முந்தைய கால கட்டம்.பிரதமராக சிரிக்கத் தெரியாத மனிதர் இருந்த காலம்.அப்போது ஒரு பலமான வதந்தி பங்குச்சந்தையில் உலா வர ஆரம்பித்தது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோல்டுஸ்டார் ஸ்டீல்ஸ் அன்ட் அலாய்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குகள் வெகு உயரே செல்லப் போகிறது என்று.அந்த நிறுவனத்தின் உரிமையாளரான திரு.பிரபாகர்ராவ் யாருடைய புதல்வர் என்று சொல்லத் தேவையில்லை.
இந்த வதந்தி எப்படி யாரால் கிளப்பி விடப்பட்டது என்று தெரியவில்லை.அப்போது நான் திருச்சியில் இருந்தேன்.அங்கே கஜப்பிரியா ஹோட்டலின் பின்புறம் ஒரு ஷேர் டிரேடிங் அலுவலகம் இருக்கும்.பெரும்பாலும் அங்கே மெடிகல்ரெப்கள்தான் டாப் அடிக்க வருவார்கள்.குப்பைகள் போல குவிந்திருக்கும் பங்குப் பத்திரங்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள்.அந்த பங்குப்பத்திரங்களை ஓப்பனாக வைத்திருப்பார்கள்.ஓப்பன் என்றால் அந்த பத்திரத்தில் யாருடைய பெயர் இருக்கிறதோ அவரது பெயரிலேயே இருக்கும்.ஆனால் சந்தையில் பல கைகளில் அந்த பத்திரங்கள் மாறிக்கொண்டிருக்கும்.டிவிடென்ட் மட்டும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவருக்கு காசோலையாகச் சென்று விடும்.பெரும்பாலும் டிரேடர்கள் யாரும் தங்கள் பெயரில் பத்திரங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள்.பெயர் மாற்றி வருவதற்கு மூன்று மாத காலம் பிடிக்கும் என்பதால் பெயரை; மாற்றிக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
பிரைமரி மார்க்கெட்டில் கூட சொந்தப் பெயரில் விண்ணப்பிக்கத் தேவையில்லை.கோவிந்த சாமி என்ற பெயருடையவர் கோ.சாமி.கோவி.சாமி.கோவிந்தாசாமி சாமிகோவிந்தன் என்று எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஒரே வீட்டிலிருந்து விண்ணப்பம்அனுப்பினாலும் ஏன் என்று கேட்கமாட்டார்கள்.பங்குச்சந்தை என்பது முறைப்படுத்தப்படாத காலம் அது.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
அங்கே பங்கு வாங்க ஒரு வயதான மனிதர் வருவார்.எப்போதுமே அசால்டாகத்தான் எதையூம் பேசுவார்.இந்த கோல்டுஸ்டார் கிசுகிசுவை எப்படியே தெரிந்து கொண்டு விட்டார் போலிருக்கிறது.
வாங்குப்பா இரண்டாயிரம் ஷேரை என்றார் பந்தாவாக.
அங்கே அமர்ந்திருந்த நாங்கள் எங்களுக்குள் "குத்துங்க எசமான் குத்துங்க"என்றௌம் கோரஸாக.
"என்ன தம்பி.நாளைக்கு பாருங்க.அத்தனை பேரும் மூக்குல விரலை வைக்கப்போறிங்க.அருமையான கம்பெனி.அவரோட பையனோட கம்பெனி.என்னவோ பண்ணப்போறானாம்.கிடுகிடுன்னு ஷேர் விலை ஏறினதும் இதே கஜப்பிரியா ஹோட்டல்லயே என் செலவில ட்ரீட்"எ;னறார் பெருமையான.
அப்போது கோல்டுஸ்டார் ஸ்டீல் கம்பெனி பங்கின் விலை ரூ 20 ஆக இருந்தது.
"குத்துங்க எசமான் குத்துங்க"என்றௌம் மறுபடியூம் கமுக்கமாக.அவர் நாங்கள் அவரைத்தான் கலாய்க்கிறௌம் என்பதைப் புரிந்து கொண்டு எழுந்து போய் விட்டார்.அதற்கு அடுத்த நாள் பரபரவென்று ஓடி வந்திருந்தார்.
நாங்கள் அத்தனை பேரும் அந்த பங்கை ஷார்ட் அடித்து விட்டிருந்தோம்.இப்போது போல ஷார்ட் செல்லிங் செய்திருந்தால் மதியம் 3.30க்குள் வாங்கிக் கொடுத்து விட வேண்டுமல்லவா.அப்போது அப்படியெல்லாம் இல்லை.கையில் பங்கு இல்லாமல் விற்று விட்டால் செட்டில்மென்ட்டிற்கு ஒரு வாரம் வரை ஆகும்.இரண்டு வாரம் கூட டயம் எடுத்துக் கொள்ளலாம்.அதனால் தைரியமாக விற்றௌம்.அப்போது காங்கிரசில் ராவ்விற்கு சற்று புகைச்சல் ஆரம்பித்திருந்த நேரம்.அரசியலையூம் வேறு மாதிரி திரித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற பாடத்தை அப்போதே கற்றிருந்தோம்.
மறுநாள் அந்த பங்கு ரூ 20லிருந்து சரசரவென்று ரூ 14க்கு வந்து விட்டது.
"என்ன பண்றது தம்பிங்களா"என்றார்.
"குத்துங்க எசமான் குத்துங்க"என்றௌம் அவரிடம்.
"ச்சே..என்னமோ டபுள் மீனிங்கா பேசறிங்கப்பா.அது நல்ல கம்பெனி"
"சார் நல்ல கம்பெனின்னா முதலீடு பண்ணனும்.மோசமான கம்பெனின்னா டிரேடிங் பண்ணனும்.நாங்க எல்லாம் ஷார்ட் அடிச்சி விட்டிருக்கம்.நீங்க?"என்றேன்.
என்னை முறைத்துக் கொண்டே சின்னப்பய என்னமோ சொல்றான் என்று அவரது அலுவலகக் காரில் ஏறி பந்தாவாகப்போய் விட்டார்.
இரண்டாயிரம் பங்குகள்.
அவர் ரூ 20ல் வாங்கியது அதற்கடுத்த நாட்களில் குறைந்து கொண்டே வந்து ரூ 2க்கு வந்து விட்டது.இதற்கிடையே நாங்கள் பரபரவென்று அலைய ஆரம்பித்தோம்.கையில் இல்லாமல் விற்ற பங்குகளை தில்லைநகரில் இருக்கும் அண்ணாமலை ஆபீசிலும் பாலக்கரையில் இருந்த ஜமால்முகம்மது ஷேர் ஆபீசிலும் போய் இரண்டு ரூபாய்க்கும் நான்கு ரூபாய்க்கும் ஒன்னரை ரூபாய்க்குமாக கலந்து கட்டி வாங்கி அந்த ஷேர் சர்ட்டிபிகேட்டுகளை சமர்ப்பித்ததில் அதாவது விற்று-வாங்கியதில் செமத்தியான லாபம்.
வந்த பணத்தில் ஒரு மோபட்டை அதன் உதிரிபாகங்களை புதிதாக வாங்கிக் கொண்டு அதன் சேசிஸை மட்டும் சந்தையில் வாங்கி புதிதாக அசெம்பிள் செய்து வண்டியை செம த்ரில்லுடன் வெள்ளோட்டம் விட்டபோது மெயின்கார்டுகேட் தெப்பக்குளம்அருகே சிக்னலில் அவரது பச்சை நிற அம்பாசிடரில் எதிர்பட்ட நம்ம கோல்டுஸ்டார் கதாநாயகன் சலிப்புடன் சிரித்தவாறு சொன்னார்-
"குத்திட்டிங்கடா நல்லா குத்திட்டிங்க.நானும் ஷாட் அடிச்சிருந்திருப்பேன்.நல்ல பங்குன்ன நம்பி வாங்கினது தப்பாப்போச்சு"
அவர் போனதும் சிரிப்பும் கும்மாளமாக அருகே இருந்த மைக்கிள்ஸ் ஐஸ்க்ரீம் கடைக்குள் புகுந்தவாறு ஐஸ்க்ரீமை சுவைக்க ஆரம்பித்த போது எதிரே இருந்த வால்போஸ்டரில்-
"சிகப்பு ரோஜாக்களில்" கமல்ஹாசன் குத்திக் கொண்டிருந்தார்.
ConversionConversion EmoticonEmoticon